பாரதிராஜா தலைமையில் ராஜ் டிவியின் 'முதல் மூவர்' விருது

|

சென்னை: சிறந்த புதுமுக திரை கலைஞர்களுக்கான முதல் மூவர் விருது வழங்கும் விழா வரும் 23ம் தேதி சென்னையில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடைபெறுகிறது.

திரையுலகில் அறிமுகமாகும் புதுமுகங்களை தேர்வு செய்து ராஜ் டிவி முதல் மூவர் என்ற விருதை வழங்கவிருக்கிறது. இந்த ஆண்டு துவங்கப்பட்டுள்ள இந்த புதிய விருது இனி ஆண்டுதோறும் வழங்கப்படும். 2012ம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக கலைஞர்கள் பட்டியலில் இருந்து ராஜ் டிவி ரசிகர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்த கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகைகள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த நகைச்சுவை நட்சத்திரங்கள், சிறந்த தயாரிப்பு நிறுவனங்கள் என மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 6 பேரை தேர்வு செய்து அதில் முதல் மூவரை ரசிகர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு முழுக்க வாக்கு சேகரிக்கும் பிரச்சார வேன் செல்ல உள்ளது. இந்த வாகனத்தில் வாக்குச் சீட்டு, வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும். ரசிகர்கள் அதிகமாக வாக்களிக்கும் கலைஞர்களின் பெயர்களும் தேர்வுக் குழு தேர்வு செய்யும் பெயர்களும் ஒத்துப் போனால் முதல் மூவரில் முதலமாவருக்கு ரூ. 1 லட்சம், இரண்டாமவருக்கு ரூ.50,000 மற்றும் மூன்றாமவருக்கு ரூ.25,000 வழங்கப்படும்.

கலைஞர்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர் பார்த்திபன், தம்பி ராமையா, சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமீலா நாசர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்வுக் குழுத் தலைவராக இயக்குனர் கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 23ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் முதல் மூவர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

 

Post a Comment