கரப்பான் பூச்சி, ஈ, கொசுவைத்தான் இனி வில்லனாக்க வேண்டும் போலிருக்கு! - கேஎஸ் ரவிக்குமார்

|

Ks Ravikumar S Confusion Over Naming Villains

வில்லன்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் ஏதாவது ஒரு மதத்தினர் சண்டைக்கு வருகிறார்கள். கரப்பான் பூச்சி, ஈ, கொசுவைத்தான் இனி வில்லனாக்க வேண்டும் போலிருக்கிறது, என கூறியுள்ளார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் 'ஒன்பதுல குரு' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இந்த படத்தில் வினய், லட்சுமிராய், அரவிந்த் ஆகாஷ், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தேவி திரையரங்கில் நேற்று நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், "அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொல்வதுபோல பி.டி.செல்வக்குமார் கணவு கண்டு இப்போது இயக்குனராகி விட்டார். என்னுடைய பல படங்களுக்கு அவர் மக்கள் தொடர்பாளராக இருந்தார். நிறைய பத்திரிகைகளும் நடத்தி வருகிறார். தற்போது இயக்குனராக உயர்ந்துள்ளார்.

இன்றைய தினம் படங்கள் எடுப்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது. கதையில் கதாநாயகன் இருந்தால் வில்லனும் இருக்க வேண்டும்.

ஆனால் வில்லன் எந்த சாதியை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. மதத்தை சார்ந்தவராகவும் இருக்ககூடாது. வக்கீலாக, டாக்டராக, போலீசாகவும் இருக்க கூடாது. அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் எதிர்த்து புகார் செய்கின்றன.

அப்படியென்றால் வில்லன்களாக யாரை வைத்துதான் படங்கள் எடுப்பது. இந்திரா நகரில் வில்லன் வசிப்பதுபோல் காட்டினாலும் அந்த தெருக்காரர்கள் எதிர்க்கிறார்கள். மிருகங்களை வில்லன்களாக காட்டினாலும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு குறுக்கே வருகிறது. கரப்பான் பூச்சி, கொசு, ஈ போன்றவற்றைதான் வில்லன் கேரக்டர்களுக்கு தேர்வு செய்யவேண்டும்போல இருக்கிறது. இப்படிபட்ட சங்கடங்களையெல்லாம் மீறி வெற்றிபெற வேண்டிய நிலைமை இயக்குனர்களுக்கு இருக்கிறது," என்றார்.

 

Post a Comment