சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளிடம் உறுதியளித்தபடி, 7 காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்கியபிறகு இந்த வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் கமல்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை:
தடை பல கடந்து உங்கள் விஸ்வரூபம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது.
நீதி சற்று நின்று வந்தாலும், அன்றே எனக்கு ஆவணவெல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு முதற்கண் நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக இந்திய மக்களுக்கும், தாமாகவே என்னைத் தேடி வந்து ஆறுதல் கூறிய தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும், எனக்குத் தெரியாமலே எனக்காகப் போராடிய அகில இந்திய திரையுலகிற்கும் நன்றி.
என் உரிமையை தமதெனக் கருதி பெரும் போர்க்குரல் எழுப்பிய செய்தி ஊடகங்கள் அனைத்துக்கும் ஒரு இந்தியனாக என் ஆழ்மனதிலிருந்து நன்றி.
எதற்கும் கலங்காது புன்னகையுடன் இன்னல்களை எதிர்கொண்ட நான், ஒரு நிகழ்வினால் நெகிழ்ந்து காதலாகி கண்ணீர் மல்க நிற்கிறேன்.
என் தமிழக மக்கள் காசோலைகளையும் பணத்தையும் தபால் மூலம் அனுப்பி வைத்து, 'யாமிருக்க பயமேன்" என்ற அர்த்தத்துடன் கடிதங்களை இணைத்து அனுப்பி வைத்தனர். நெஞ்சம் விம்மி கண்ணீர் காட்சியை மறைக்க மனது 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்,' என கேவிக் கேவி பாடியது.
என் கலையையும், அன்பையும் மக்கள் நலன் பயக்கும் சிறு தொண்டுகளையும் தவிர வேறொன்றும் செய்வதறியேன்.
காசோலைகளையும் பணத்தையும் அன்புடன் திருப்பியனுப்புகிறேன். உங்கள் விலாசங்கள் என் வசம். நாளை மதமும் அரசியலும் என்னை வறியவனாக்கினாலும், உண்பதற்கும் ஒதுங்குவதற்கும் பல அரிய விலாசங்கள் என் கைவசம் உள்ளன என்ற தைரியத்தில் இதைச் செய்கிறேன்.
நான் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் என் நிரந்தர விலாசம் உங்கள் இனிய மனங்களே.
பொறுமை காத்த என் இனிய நற்பணியாளர்களுக்கு பெரு வணக்கம். நற்பணி மன்றம் என்ற பெயர்க் காரணத்தை செயலாக்கிக் காட்டி ரௌத்திரம் பழகாமல், அகிம்சை பழகிய உங்கள் வீரம் சரித்திரத்தில் இடம்பெறும்.
வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை என்பதை ஊருக்கு எடுத்துக் காட்டிய, என் ரசிக சகோதரர்களின் விஸ்வரூபத்தை வணங்கி, யாம் தயாரித்த விஸ்வரூபத்தை காணிக்கையாக்குகிறேன்.
வாழிய செந்தமிழ்.. வாழிய நற்றமிழர்... வாழிய பாரத மணித்திருநாடு!
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment