தமிழின் முன்னணி இயக்குநர், குணச்சித்திர நடிகரான மணிவண்ணன் மகன் நடிகர் ரகுவண்ணனுக்கும், ஈழத் தமிழ்ப் பெண் அபிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சென்னையில் எளிய முறையில் சிறப்பாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மணிவண்ணனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.
கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி, நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, ஆண்டான் அடிமை வரை தமிழ் சினிமாவில் 49 படங்களை இயக்கியவர் மணிவண்ணன். 50வது படமாக அமைதிப் படை பாகம் 2 (நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ) இயக்கி வருகிறார்.
அதற்கடுத்து தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தையும் இயக்குகிறார். அவரது மகன் ரகுவண்ணன், மாறன் என்ற படத்தில் சத்யராஜுடன் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார். இப்போது அமைதிப்படை -2, தாலாட்டு மச்சி தாலாட்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவருக்கும், அபி என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கும் நேற்று முன்தினம் சென்னை கிரீன் பார்க்கில் நிச்சயதார்த்தம் நடந்தது.
எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மணிவண்ணனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.
திருமணம் வரும் ஜூன் மாதம் விமரிசையாக நடக்கவிருக்கிறது.
Post a Comment