பாலிவுட்டின் சாதனை நாயகன் அமிதாப் பச்சன் இன்று காலை ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஹாலிவுட்டில் வந்து பணியாற்றுமாறு அமிதாப்புக்கு அழைப்பு விடுத்தார் ஸ்பீல்பெர்க்.
தனது லிங்கன் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றதைக் கொண்டாட இந்தியா வந்துள்ளார் ஸ்பீல்பெர்க். இந்தப் பயணத்துக்கு முழு ஏற்பாடுகளையும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அனில் அம்பானியும் அவர் மனைவி முன்னாள் நடிகை டினாவும் செய்துள்ளனர்.
ஸ்பீல்பெர்க்கைச் சந்திக்க 61 இந்திய சினிமா பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அமிதாப் பச்சனை இன்று காலை சந்தித்தார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.
அனில் அம்பானியும் டினாவும் அவரை வரவேற்று ஸ்பீல்பெர்க்குக்கு அறிமுகப்படுத்தினர்.
அமிதாப்பின் படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதாகவும், அவரது நடிப்பு ஹாலிவுட்டையும் கவரக்கூடியதாக உள்ளதாகவும் ஸ்பீல்பெர்க் தெரிவித்தார்.
இந்திய சினிமா உலகின் சார்பில் ஸ்பீல்பெர்க்கை இந்தியாவுக்கு வரவேற்ற அமிதாப், அவரது படங்கள், இந்தியாவில் அவற்றுக்கு கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பு குறித்து கூறியபோது, மிகவும் மகிழ்ந்தார் ஸ்பீல்பெர்க்.
இருவரும் பல்வேறு விஷயங்களைப் பேசினர். முன்னதாக ஸ்பீல்பெர்க்கை சந்திக்கப் போகும், இந்த சந்திப்பு தனக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமிதாப் தெரிவித்திருந்தார்.
அமிதாப்பைத் தொடர்ந்து ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்தனர்.
Post a Comment