கல்லால் அடிங்க, ஆசிட் வீசுங்க, துப்பாக்கியால் சுடுங்க… நீயா நானாவில் பெண்கள் ஆவேசம்!

|

Vijay Tv Neeya Naana Discussion About Insecurity Of Wom

தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பார்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு என்ன தண்டனை தரலாம் என்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பெண்கள் அனைவருமே குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவேண்டும்... நடுரோட்டில் கல்லால் அடிக்க வேண்டும்... அவன் முகத்தில் ஆசிட் வீச வேண்டும்... தூக்கில் போடவேண்டும் என்று பொங்கினார்கள் பெண்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதுதான் இந்த வாரம் நீயா நானாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. டெல்லியில் மருத்துவமாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக்கு பின்னர் இந்தியாவில் ஒட்டுமொத்த பெண்கள் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன.

இந்த குற்றங்களுக்கு காரணம் யார்? எந்த சூழ்நிலையில் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சென்னையில் எங்கெங்கு பாதுகாப்பாற்ற நிலை உள்ளது என்பது பற்றி விவாதிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தனர். வன் கொடுமைக்கு ஆளான பெண்கள் புகார் அளிக்கும் போது அங்கு அவர்கள் சந்திக்கும் கேள்விகள் கொடூரமானவை என்றார் கவின்மலர். கிராமத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அது தொடர்பான வழக்கை சந்திக்கும் போது அந்த வழக்கறிஞர் கேட்ட கேள்விகளை பதிவு செய்தார்.

பாலியல் வன்முறையின் போது நீங்கள் உச்ச கட்டம் அடைந்தீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாமலேயே அந்தப் பெண் ஆமாம் என்று கூறவே அந்த வழக்கே மாறிப்போனது என்றார் கவின் மலர். இதுபோன்ற கொடுமைகளுக்காகவே பல பெண்கள் தங்களின் கொடுமைகளைப் பற்றி வெளியே சொல்ல அஞ்சுகின்றனர் என்றார்.

பாலியல் கொடுமைக்கு மரணம் மட்டுமே தீர்வாகாது என்று சில பெண்ணியல் பேசும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். பெண்கள் மீதான வன்கொடுமைக்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல இந்த சமூகத்தின் கட்டமைப்பும் காரணம். ஆணும், பெண்ணும் சரிசமாக இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் ஒருவர்.

கல்வித்துறையில் மாற்றம் வரவேண்டும். எப்படி படிக்கவேண்டும். பணம் சம்பாதிக்க என்ன படிக்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படும் கல்வி நிலையங்களில் பெண்களை மதிப்பது குறித்தும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் ஒரு சமூக ஆர்வலர்.

பாதிக்கப்பட்டது பெண் இனம்தான். ஆனால் பெண்களுக்கு மட்டுமே அப்படி இருக்கவேண்டும். இப்படி உடுத்தவேண்டும்... ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்களுக்கு அந்த அறிவுரைகளை கொடுக்கலாமே என்றார் பெண்ணிய பேச்சாளர் ஓவியா.

பெண்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்களோ அதனைப் பொருத்துதான் அவர்களுக்கான வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. பெண்கள் தங்களை செக்ஸ் சிம்பலாக வெளிப்படுத்துவதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார் உளவியல் நிபுணர் ஷாலினி.

ஆண்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம்பிக்கையை தரவேண்டும். எங்கே தங்களின் அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினால்தான் பெண்களின் மீதான வன்முறையை அதிகரிக்கின்றனர் எனவே பெண்களின் மீதான பார்வையை ஆண்கள் சமூகத்தினர் மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார் கோபிநாத்.

 

Post a Comment