மீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி!

|

Kovai Thambi Is Back

எண்பதுகளில் திரைப்படத் தயாரிப்பில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்தவர் கோவைத் தம்பி. இவரது மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உதயகீதம், இதயக் கோயில், உயிரே உனக்காக போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.

ஆனால் மங்கை ஒரு கங்கை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் போன்ற படங்கள் ஏமாற்றியதால், தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். வேந்தர் மூவீசுடன் இணைந்து உயிருக்கு உயிராக என்ற படத்தை தயாரிக்கிறார் கோவைத் தம்பி.

இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய மனோஜ்குமார் இயக்குகிறார்.

இயக்குநர் விஜய மனோஜ்குமார்?

இவர் வேறு யாருமல்ல... மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை," என்றார்.

இந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு ஏ ஜான்.

 

Post a Comment