சஞ்சய் தத் சிறைக்குப் போனாலும், அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போலீஸ்கிரி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.
தமிழில் வெளியான சாமி படம்தான் இந்தியில் போலீஸ்கிரி என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு வேக வேகமாக நடந்து வந்தது. பொங்கல் விடுமுறையின்போது, சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் சஞ்சய் தத்தும் ரஜினியைச் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், இப்போது சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஏற்கெனவே அவர் 18 மாதங்கள் சிறையில் இருந்ததால், இன்னும் மூன்றரை ஆண்டுகளை சிறையில் கழித்தாக வேண்டும்.
இதனால் போலீஸ்கிரி படத்துக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டபோது, கேஎஸ் ரவிக்குமார் ஷூட்டிங்கை கடந்த வாரமே முடித்துவிட்டதாகவும், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடப்பதால் படம் திட்டமிட்டபடி ஜூன் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்தனர்.
அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சய் தத் ரசிகர்களுக்கு போலீஸ் கிரிதான் ஒரே ஆறுதல்!
Post a Comment