சென்னை: தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என்றார் நடிகர் சுமன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சுமன்.
தெலுங்கில் 99-வது படமாக 'கன்னிகா பரமேஸ்வரி' என்ற பக்தி படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தெரிவிக்க செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "நிறைய படங்களில் விதவிதமான வேடங்களில் நடித்துவிட்டேன். அன்னமய்யா (அன்னமாச்சார்யா) என்ற படத்தில் ஏழுமலையானாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழுமலையானாகவே பலர் என்னை பார்க்கிறார்கள்.
அரசியலில் எனக்கு ஆர்வம் உண்டு. தலைசிறந்த முதல்வர் என்றால் ஜோதிபாசுவைதான் சொல்வேன். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாலையில் நடந்து சென்ற ஒரே முதல்வர் அவர்தான்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தென் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி. அவரை பாராட்ட வார்த்தையே இல்லை. ஏழைகள் நலனுக்காகவே அவர் பல திட்டங்கள் போட்டு செயல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் மலிவு விலையில் மிகத் தரமான உணவகத்தை சென்னையில் தொடங்கி உள்ளார். தற்போதைய விலைவாசி உயர்வில் மலிவு விலையில் உணவு வழங்கி ஏழைகளின் பசியை போக்கி உள்ளார். யாருக்கும் வராத இந்த யோசனையை அவர் செயல் படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது.
ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறார். அரிசி கொடுத்தாலே போதும். அதை சமைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் பசி போயிடும். இப்படி ஏழைகளை மனதில் வைத்தே அவர் திட்டம் தீட்டுகிறார். அவர் ஒரு பெண் என்பதால் தாய்மை உள்ளத்துடன் அனைத்து திட்டங்களையும் போடுகிறார்," என்றார்.
Post a Comment