மும்பை: ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தூதுவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் வித்யா பாலன்.
2013 ஆம் ஆண்டு, மே மாதம், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்தியத் திரைப்பட விழா நடக்கிறது.
மே மாதம் 3-ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியத் திரையுலகின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இவ்விழாவில் சென்ற நூற்றாண்டின் சிறந்த திரைப்படங்கள் காட்டப்படுகின்றன. இந்திய சினிமாவின் முதல் படமான ‘ராஜா ஹரிச்சந்திரா'வும் இதில் இடம் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் விளம்பரத் தூதுவராக, இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
35 வயதான வித்யாபாலன் ‘த டர்டி பிக்சர்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதினைப் பெற்றவர்.
இந்திய திரைப்பட விழாவிற்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், " இந்த கவுரவம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆஸ்திரேலியா எனனக்கு மற்றொரு வீடு மாதிரி. இந்த நிகழ்ச்சிக்கு விளம்பர தூதுவராக நீடிக்க ஆயுட்கால ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறேன்," என்றார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு சினிமா எடுக்கவும் ஆசையாக உள்ளதாம் வித்யாபாலனுக்கு.
Post a Comment