நடிப்பு: கரண், மித்ரா குரியன், ராஜேஷ், விவேக், சத்யன்
இசை: சத்யசெல்வா
தயாரிப்பு: வி பழனிவேல்
இயக்கம்: பாபு கே விஸ்வநாத்
விவசாயம், எளிய வாழ்க்கை என்று இருந்த தஞ்சை மண்ணை, ரவுடியிசமும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ராஜ்யமும் ரத்தக் களறியாக்குகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பவன் ஒரு நல்லாசிரியருக்கு மகனாகப் பிறந்தவன். ஆனால் அதே நல்லாசிரியரால் வளர்க்கப்பட்ட ஹீரோ கரண் எப்படி காந்திய வழியில் அந்த வில்லனை திருத்த முயல்கிறார் என்பது கந்தா படத்தின் சுருக்கமான கதை.
கரண் இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டும் ஆவேசம் காட்டுவது ஆறுதல்.
அவருக்கு ஜோடியாக மித்ரா குரியன். இவருக்கும் கரணுக்கும் காதல் மலரும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். சில காட்சிகளில் பயமுறுத்துகிறது மித்ராவின் மேக்கப்.
விவேக் வரும் காட்சிகள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் கூத்துக்களை அம்பலமாக்கினாலும், அவற்றில் நகைச்சுவை ரொம்பவே கம்மி என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ரியாஸ்கான், காதல் தண்டபாணி, சத்யன், ஆர்த்தி ஆகியோர் கேரக்டர்களை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்.
விவேக்கால் தர முடியாத காமெடியை இயக்குநர் க்ளைமாக்ஸில் தந்துவிடுகிறார்.
தஞ்சை கிராம நிலங்கள் எந்த நிலையில் உள்ளன, விவசாயம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை சில காட்சிகள் உறைக்கிற மாதிரி சொல்கின்றன.
ரொம்ப நாளாக தயாரிப்பிலிருந்த படம். எழுத்தாளராக இருந்து இயக்குநராகியிருக்கும் பாபு கே விஸ்வநாத்துக்கு இது முதல் படம். காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி தெரிகிறது. ஆனால் அங்கங்கே துண்டாக நிற்கின்றன. முணுக்கென்றால் வரும் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல க்ளைமாக்ஸை இவ்வளவு நாடகத்தனம் இல்லாமல், புத்திசாலித்தனமாக அமைத்திருக்கலாம்.
-எஸ்எஸ்
Post a Comment