இயக்குநர் சங்க உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக நாளை ஃபெப்சி ஒரு நாள் வேலை நிறுத்தம்!

|

சென்னை: தமிழ் ஈழம் அமைக்கக் கோரி சினிமா இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ள ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பு ஃபெப்சி ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்று கோரி மாணவர் போராட்டங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் வலுத்து வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழீழக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கவும் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறது. இதில் சினிமா உலகின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய அமைப்பான பெப்சி.

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் ஜி சிவா விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழக அரசு எடுத்த தீர்மானத்தை ஆதரித்தும், தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் நாளை ஒரு நாள் ஃபெப்சி அமைப்பு அடையாள வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறது.

அன்றைய தினம் இயக்குநர்கள் சங்க உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Post a Comment