தேசிய விருது மகிழ்ச்சி அளிக்கிறது - டைரக்டர் லிங்குசாமி

|

We Expected The Award Directer Lingusamy

தியேட்டர்களில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டியபோதே விருது உறுதியாகி விட்டது. இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என டைரக்டர் லிங்குசாமி கூறியுள்ளார்.

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில், அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து, பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த படம் 'வழக்கு எண் 18/9'. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்து இருக்கிறது.

இதுபற்றி டைரக்டர் லிங்குசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘வழக்கு எண் 18/9' படத்தை பார்த்து விட்டு, படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போதே அந்த படத்துக்கு விருது உறுதியாகிவிட்டது. பத்திரிகைகள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்த பொதுமக்களின் பாராட்டுகள், மேலும் எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தின.

ஏற்கனவே இந்த படத்துக்கு, தமிழ்நாட்டில் நடந்த சர்வதேச படவிழாவில் விருது கிடைத்தது. பிரான்சு திரைப்பட விழாவிலும் விருது கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, ‘வழக்கு எண் 18/9' படத்துக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு முதலில் ஆதரவு தந்த ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

‘வழக்கு எண் 18/9' படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல், என் நண்பர். அவர் மூலம் இந்த படத்துக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறினார்.

டைரக்டர் பாலாஜி சக்திவேல் கூறும்போது, ஒரு தரமான படத்துக்கு கிடைத்த மிக சிறந்த விருதாக இதை கருதுகிறேன். தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய நண்பர்களின் சந்தோஷத்தை என் சந்தோஷமாக நினைக்கிறேன். ‘வழக்கு எண்' படத்துக்கான ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை அங்கீகரித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருது எனக்கு இன்னும் நல்ல சமூக படைப்புகளை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்து இருக்கிறது' என்று கூறினார்.

‘வழக்கு எண் 18/9' படத்துக்காக, மேக்கப்மேனுக்கான தேசிய விருது பெறும் ராஜா கூறும்போது, நான் எதிர்பாராத விருது இது. இந்த விருது கிடைப்பதற்கு காரணமான தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர் பாலாஜி சக்திவேல் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ' என்றார்.

 

Post a Comment