சென்னை: தலிபான் தீவிரவாதிகளை, விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய சினிமா இயக்குநர் அமீருக்குக் கண்டனம் தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அப்போது தலிபான் தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்குக் கண்டனம் வெடித்துள்ளது.
இணையதளங்களில் அமீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் அமீரை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர். தலிபான்களோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.
Post a Comment