எதிர்காலத்தில் சமூகப் பணியில் முழு கவனம்! - அரசியலுக்கு அடி போடும் த்ரிஷா!!

|

Trisha S Interest Politics   

சென்னை: எதிர்காலத்தில் சமூகப் பணிகளில் அதிக அளவு ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன். அரசியலுக்கு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

பத்தாண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, அரசியலுக்கு வருவதை சூசகமாக அறிவித்துள்ளதாகவே இது பார்க்கப்படுகிறது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூக சேவை, பிராணிகள் பாதுகாப்பு, ஆதரவற்றோருக்கு உதவி என பல்வேறு நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார் த்ரிஷா.

நேற்று மகளிர் தினத்தை ஒட்டி அவர் நிருபர்களைச் சந்தித்து அளித்த பேட்டி:

சமூகத்தில் பெண்களை பாதிக்கிற விஷயங்கள் நிறைய உள்ளன. பெண் சிசு கொலை, பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இது போன்ற செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன. இதுமிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

இதற்கு முடிவு கட்டி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்காக சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை வழங்கும்படி சட்டம் கொண்டு வர வேண்டும்.

குஷ்பு, ராதிகா போன்றோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருப்பது சந்தோஷமான விஷயம். அரசியலில் ஈடுபடுவது தவறானது அல்ல. அரசியலுக்கு வரவேண்டு மென்றால் மக்கள் அபிமானியாக இருக்க வேண்டும்.

நான் இப்போது பிராணிகள் நலனில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசி தங்களுக்கும் அது போன்ற ஆர்வம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவில் நான் பத்து வருடமாக இருக்கிறேன். இப்போது தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை எடுக்க ஆரம்பித்து உள்ளனர். அதற்கான மாற்றம் முளைக்க துவங்கியுள்ளது.

அரசியலில் ஈடுபடுவீர்களா என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில் சமூக சேவை பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளது. உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். தகுதியான மாப்பிள்ளை கிடைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன்," என்றார்.

 

Post a Comment