ஜோத்பூர்: அரிய வகை உயிரினமான கறுப்பு மானைச் சுட்ட வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகர் சல்மான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதே வழக்கில் சல்மானுடன் குற்றம்சாட்டப்பட்ட தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்கள் மீது புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன் ஹம் சாத் சாத் ஹெய்ன் பட ஷூட்டிங்கின்போது, மான் வேட்டைக்குப் புறப்பட்டனர் சல்மான் கானும் உடன் நடித்த தபு, சோனாலி பிந்தரே, நீலம் மற்றும் சாயிஃப் அலி கான் ஆகியோரும்.
இந்த வழக்கு கடந்த டிசம்பரில் மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டது. இப்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அனைவரும் ஜோத்பூருக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான புதிய குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சல்மான் கான் அமெரிக்காவில் இருப்பதால் வரவில்லை. நாளை நிச்சயம் வந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இந்த வழக்கில் சல்மான் கானின் குற்றம் உறுதியானால் அவர் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவருடன் வேட்டைக்குப் போன தபு, சோனாலி, நீலம் மற்றும் சாயிப்புக்கும் இதுதான் கதி.
இந்த வழக்கில் முக்கிய சாட்சி, சல்மான் உள்ளிட்ட நடிகர்களை ஜீப்பில் ஏற்றிச் சென்ற ஓட்டுநர்தான். ஆனால் அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பிரிவு 148ல் சல்மான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ராஜஸ்தான் நீதிமன்றம் நீக்க முடிவு செய்தது. ஆனால் இதனைத் தடுத்த உச்சநீதிமன்றம், சல்மானை அந்தப் பிரிவின் கீழும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment