மும்பை: ஓம் ஷாந்தி ஓம் படத்தில் தன்னை அவமதிப்பது போல் உள்ள காட்சிகளை, நீதிமன்றம் சொன்ன பிறகும் நீக்காததால் ரூ 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார் மூத்த நடிகர் மனோஜ்குமார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோஜ்குமார். இவரது உப்கார், பி இமான், நந்தா, ரொட்டி கப்டா அவுட் மகான், சன்யாசி, தஸ் நம்பரி, கிராந்தி போன்ற படங்கள் மனோஜ் குமாரை பாலிவுட்டின் முக்கிய சக்தியாக மாற்றின.
அவரது படங்களில் அவருக்கென்று ஒரு பாணி உண்டு. கைகளால் அடிக்கடி முகத்தை மறைத்துக் கொள்வார். அப்படி மறைத்தபடி அவர் ஒரு படத்தின் பிரிமியருக்கு வரும்போது போலீஸ் அவரை போலீஸ் விரட்டுவதுபோல ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது 2007-ல் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான ஓம் ஷாந்தி ஓமில். மேலும் அவரது இந்த ஸ்டைலைப் பயன்படுத்தி ஷாரூக்கான் அரங்கினுள் நுழைந்துவிடுவதாகவும் காட்சி இடம்பெற்றுள்ளது.
'படத்தில் அந்த காட்சி எழுபதுகளில் நடப்பதாக வைத்துள்ளார்கள். எழுபதுகளில் நான் பெரிய ஹீரோ. என்னை அடையாளம் தெரியாத அளவுக்கா மும்பை போலீஸ் இருப்பார்கள்?' என்று கேட்ட மனோஜ்குமார், இந்தப் படத்தில் தன்னை ஷாரூக்கானும் இயக்குநர் பரா கானும் அவமானப்படுத்திவிட்டதாகக் குற்றம்சாட்டினார். பின்னர் ஷாரூக்கும் பராவும் மன்னிப்புக் கேட்க, மனோஜ்குமாரும் மன்னித்துவிட்டதாகக் கூறினார்.
ஆனால் அந்தப் படத்தை 2008-ல் சோனி டிவியில் ஒளிபரப்ப தயாரானபோது, தன்னை கிண்டல் செய்யும் காட்சிகளை நீக்கக் கோரி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனோஜ்குமார் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்குமாறு நீதிமன்றமும் தடை விதித்தது.
இப்போது இந்தப் படத்தை ஜப்பானில் சமீபத்தில் வெளியிட்டார் ஷாரூக் கான். ஆனால் மனோஜ்குமார் தொடர்பான காட்சிகள் நீக்கப்படவில்லை.
இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் மனோஜ்குமார்.
"இரண்டுமுறை அவர்களை நான் மன்னித்தேன். ஆனால் இந்த முறை அப்படி விட முடியாது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை மதிக்காமல் என்னை கிண்டல் செய்யும் காட்சிகளுடன் படத்தை வெளியிட்டுள்ளனர். எனவேதான் ரூ 100 கோடி கேட்டு மான நஷ்ட வழக்குப் போடுகிறேன்," என்றார்.
படத்தை ஷாரூக்கானும் ஈராஸ் நிறுவனமும் தயாரித்துள்ளனர். இந்தப் படம் ரூ 35 கோடியில் தயாரானது. ரூ 150 கோடிக்கும் மேல் வசூலித்தது.
Post a Comment