4 கோடிக்கு மேல் கடன் - பிரபல சினிமா எடிட்டர் விஷம் குடித்தார்!

|

சென்னை: ரூ 4 கோடிக்குமேல் கடன் சுமை ஏறிவிட்டதால், சமாளிக்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார் பிரபல சினிமா படத் தொகுப்பாளர் (எடிட்டர்) ஜெயச்சந்திரன்.

விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தில் தொடங்கி, ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர் ஜெயச்சந்திரன், விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்களின் எடிட்டரும் இவர்தான்.

தமிழக அரசிடம் 5 முறை சிறந்த படத் தொகுப்புக்கான விருதினைப் பெற்றவர் ஜெயச்சந்திரன்.

சொந்தமாக விஜயகாந்த் நடித்த மனித தர்மம், இந்தப் படை போதுமா?, தங்கப்பாப்பா போன்ற படங்களைத் தயாரித்தார்.

ஆனால் இதில் ஒருபடம் கூட ஓடவில்லை. இதனால் அவருக்கு கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. கிட்டத்தட்ட ரூ 4 கோடியைத் தாண்டிவிட்டதாம் இந்தக் கடன்.

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி அதிகரித்ததால், தற்கொலை செய்ய விஷம் குடித்துள்ளார் ஜெயச்சந்திரன்.

இதைக் கண்டுபிடித்துவிட்ட அவர் மனைவி தேவி, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஜெயச்சந்திரனை சேர்த்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயச்சந்திரன் தந்தை கோவிந்தசாமியும் அக்காலத்தில் பெரிய படத்தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment