சென்னையில் ஒரு நாள் படத்துக்கு ரஜினி பாராட்டு!

|

Rajinikanth Lauds Chennayil Oru Naal Film

சென்னை: சரத்குமார், பிரகாஷ்ராஜ் நடித்த சென்னையில் ஒரு நாள் திரைப்படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை இந்தப் படம் அருமையாக உணர்த்தியுள்ளது என்று அவர் தனது பாராட்டுக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மூளைச் சாவடைந்த ஹிதேந்திரன் என்ற இளைஞனின் உடல் உறுப்புகளை, பெற்றோர் சம்மதத்துடன் எடுத்து தேவைப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்தினர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு மலையாளத்தில் ட்ராபிக் என்ற படத்தை எடுத்தனர். அது பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அந்தக் கதையை தமிழில் சென்னையில் ஒரு நாள் எனும் பெயரில் படமாக்கினர்.

சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ், சேரன், பிரசன்னா, பார்வதி மேனன், இனியா உள்பட பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்த இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

படத்தை சமீபத்தில் ரஜினிக்கு போட்டுக் காட்டினர். படம் பார்த்த ரஜினி, அந்தக் கதையின் முக்கியத்துவத்தைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "மரணத்துக்குப் பின் உடல் உறுப்புகள் வீணாக அழிவது பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. அப்படி அழிய விடுவதைவிட, அதை ஒரு தேவைப்படும் நோயாளிக்குப் பொறுத்தி உயிரைக் காப்பாற்றுவதன் அவசியத்தை சென்னையில் ஒரு நாள் படம் உணர்த்துகிறது. இந்தப் படத்தில் நடித்த, படம் எடுத்த அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment