சரஸ்வதி சபதம் படத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்!

|

Legal Notice Saraswathy Sabatham

சென்னை: சரஸ்வதி சபதம் தலைப்பை புதிய படத்துக்கு சூட்டுவதை எதிர்த்து சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி நடித்து 1966-ல் வெளியான புராண படம் 'சரஸ்வதி சபதம்'. மிகப் புகழ்பெற்ற இந்தப் படத்தின் தலைப்பை புதிய படம் ஒன்றிற்கு சூட்டியுள்ளனர்.

இதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தத் தடை கோரி வந்தனர்.

பட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுத்தான் தலைப்பை பயன்படுத்துவதாக தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோருக்கு சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திர சேகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "சரஸ்வதி சபதம் பெயரில் படம் எடுப்பது சிவாஜி ரசிகர்களை புண்படுத்துவதாக உள்ளது. இப்படத்துக்கான விளம்பரங்களில் மது அருந்தும் பார் இடம் பெற்றுள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, கர்ணன் போன்றவை இந்துக்கள் மற்றும் ரசிகர்களின் சென்டிமென்ட் சம்பந்தப்படடவை. அந்த பெயர்களை புதுப்படங்களுக்கு பயன் படுத்த கூடாது. எனவே தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Post a Comment