தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் வடிவேலு. தன் மூத்த மகள் திருமணத்துக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளில் கூட ஒருவரையும் அழைக்கவில்லை காமெடிப் புயல்.
வடிவேலு மகள் கன்னிகா பரமேஸ்வரி - சதீஷ்குமார் திருமணம் மதுரையில் இரு தினங்களுக்கு முன்பு மகா எளிமையாக நடந்தது. மண்டபம் இருந்த இடம்கூட மதுரைக்கு வெளியே ஒதுக்குப் புறமான புறநகர் பகுதி.
என்ன பொண்ணுக்கு கல்யாணமாமே என்று கேட்ட அத்தனை திரையுலக, அரசியல் நண்பர்களுக்கும், 'ஆமாம்ணே... ஆனா யாரும் சிரமப்பட்டு வரவேணாம்னுதான் நானே எல்லார் வீட்டுக்கும் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டு வர்றேன்," என்று கூறிவிட்டாராம் வடிவேலு. ரசிகர்கள் யாரையும் மண்டபம் பக்கமே வரக்கூடாது என்று கூறிவிட்ட வடிவேலு, பத்திரிகையாளர்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
தன்னை சினிமாவில் ஒரு ஆளாக்கிய ராஜ்கிரணிடம் கூட, நிலைமை சரியில்லண்ணே. நானே உங்க வீட்டுக்கு பிள்ளைகளை கூட்டிட்டு வர்றேன் என்று கூறியிருக்கிறார்.
'அப்படியென்னய்யா நிலைமை... நீ என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி ஒதுங்கி நிக்கிற..' என்று உரிமையுடன் கண்டித்தாராம் ராஜ்கிரண்.
வடிவேலுவை அரசியலுக்கு அழைத்து வந்த திமுகவின் மதுரை தலைமை முக அழகிரிக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ கூட அழைப்பில்லை.
"நமக்கு அரசியல், சினிமா என அனைத்து தரப்பிலும் நண்பர்கள் ஏராளம் உண்டு. ஆனால் இப்போது அவர்களை அழைக்க முடியாத சூழலில் இருக்கிறேன். அவர்களும் என்னைப் புரிந்து கொண்டு இதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் என் மகன் கல்யாணத்தை பிரமாண்டமா செய்வேன். அப்போ அமர்க்களப்படுத்திடலாம்ணே,' என்கிறார் வடிவேலு.
வடிவேலுவுக்கு மூன்று மகள்கள், ஒரே ஒரு மகன். இன்னும் மூன்று திருமணங்கள் அவர் வீட்டில் நடக்கவிருக்கின்றன. சினிமாவில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ள வடிவேலு, தன் வீட்டின் அடுத்தடுத்த திருமணங்களை எந்த வித நெருக்கடியுமில்லாமல் நடத்தட்டும்!
Post a Comment