-எஸ். ஷங்கர்
நடிப்பு: விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, முத்துராமன், டெல்லி கணேஷன், சுஜாதா
ஒளிப்பதிவு: விஜய்
இசை: யுவன் சங்கர் ராஜா
மக்கள் தொடர்பு: ஜான்சன்
தயாரிப்பு: பசங்க புரொடக்ஷன்ஸ்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: பாண்டிராஜ்
பசங்க, வம்சம், மெரினா என மூன்று படங்களை மூன்று விதமாய் தந்த பாண்டிராஜ், தனது நான்காவது படத்தை முழுக்க முழுக்க காமெடிக் கதம்பமாகத் தந்திருக்கிறார், நல்ல மணத்தோடு!
விமலும் சிவகார்த்திகேயனும் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் சுற்றும் இளைஞர்கள். அப்பாக்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். ஒரே லட்சியம் எப்படியாவது அரசியலில் குதித்து, கவுன்சிலராகி சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்.
திருச்சி பொன்மலைதான் படத்தின் களம். படத்தின் முதல் பாதியை சரக்கும் முறுக்கும் மாதிரி, டாஸ்மாக்கையையும் காமெடிக் காட்சிகளையும் மிக்ஸ் பண்ணிக் கொடுத்த பாண்டி, இரண்டாம் பாதியில் அப்பா - மகன் சென்டிமெண்டை அழுத்தமாகக் கொடுத்து மனதைத் தொடுகிறார்.
விமல்தான் ஹீரோ என்று சொல்ல முடியாததற்குக் காரணம், அவரது நடிப்பு. ஏன் இப்படி ஒரே மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தில் பாண்டிராஜ் கொடுத்த அருமையான வாய்ப்பை அவர் இன்னும் கூட சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
ரஜினி ரசிகன் என்பதாலோ என்னமோ 'தர்மத்தின் தலைவன்' கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனை சுலபத்தில் ஏற்க முடிகிறது. அவர் செய்யும் காமெடிகளையும், சமயத்தில் காமெடி என்ற பெயரில் அவரது கடிகளையும் பொறுத்துக் கொள்ள முடிகிறது.
விமலுக்கு ஜோடியாக வரும் பிந்து மாதவியின் கண்களை வைத்தே காட்சிகளை அமைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். சிவகார்த்திகேயனும் அவர் ஜோடி ரெஜினாவும் அடிக்கும் காதல் லூட்டிகள் இளமைக் குறும்புகள்.
படம் கொஞ்சம் டல்லடிக்கும் போதெல்லாம் கலகலப்பை கன்டினியூ பண்ண உதவுகிறார், வீட்டோடு மாப்பிள்ளையாக வரும் பரோட்டா சூரி.
யுவனின் இசை, விஜய்யின் ஒளிப்பதிவு எல்லாமே இந்தப் படத்தின் தன்மைக்கு போதுமான அளவுக்கு உள்ளன.
படத்தின் பெரிய பலம் பாண்டிராஜின் வசனங்கள். ஒரு சில இடங்களில் பத்திரிகை ஜோக்குகள் கூட எட்டிப் பார்க்கின்றன. ஆனாலும், மனதை லேசாக்கும் அளவுக்கு சரவெடியாக அமைந்துள்ளதை பாராட்ட வேண்டும்.
முதல் பாதியில் முணுக்கென்றால் எட்டிப் பார்க்கும் டாஸ்மாக் சமாச்சாரத்தையும் இரட்டை அர்த்த வசனங்களையும் குறைத்திருக்கலாம்.
ஒரு படத்தை அல்லது அதை உருவாக்கும் இயக்குநரை ஏ பி சி என்றெல்லாம் தரம் பிரிப்பது எத்தனை பெரிய தவறு... பசங்க படம் பார்த்து கைத்தட்டிய அதே கூட்டம்தான் கேடி பில்லா கில்லாடி ரங்காவுக்கும் கைத்தட்டுகிறது.
ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் அனைத்து வகை ரசனைகளும் ஒளிந்து கிடக்கின்றன. அந்த ரசனைக்கு தீனி போடுமளவுக்கு படம் தரத் தெரிந்தவர்கள் தர அளவுகளைத் தாண்டிவிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் அத்தனை தரப்பையும் திருப்திப்படுத்தும் வித்தை தனக்கும் கைவரும் என்பதை நிரூபித்திருக்கிறார் பாண்டிராஜ்!
Post a Comment