சென்னை: பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் வருவதோடு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிரபுதேவாவின் படத்தில் ஒரு சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த பிரபு தேவாவுக்கு இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து தன் படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment