மும்பை: இந்த ஆண்டு நடக்கும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்கிறார்.
இந்த ஆண்டு நடக்கும் கேன்ஸ் விழா இந்தியாவைப் பொறுத்தவரை மிக விசேஷமானது.
காரணம் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இந்த விழாவில் நடக்கவிருக்கினறன. பிரெஞ்ச் அரசும் இந்த கொண்டாட்டங்களில் இணைந்துள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராயை பிரெஞ்ச் அரசு சார்பில் அழைத்துள்ளனர்.
சென்ற வருடம், அவருடைய பிறந்த நாளின்போது, பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதினை அளித்து கவுரவித்தது நினைவிருக்கலாம்.
கேன்ஸ் விழாக்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். இதுகுறித்து பிரெஞ்ச் தூதர் பிரான்க்காய்ஸ் ரிச்சியர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதன் மூலம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார். வரும் திரைப்பட விழாவில், இந்திய சினிமா குறித்து அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்திய திரை உலகின் முக்கிய பிரமுகர்களை இந்த விழாவுக்கு அழைக்கப் போகிறோம். ஐஸ்வர்யா ராயும் சிறப்பு அழைப்பினைப் பெறுவார்," என்றார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அங்கு வைத்துதான் கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுகிறார்.
அடுத்து பாலிவுட் சாதனை நடிகர் அமிதாப் பச்சன் தனது முதல் ஹாலிவுட் படத்துக்காக கேன்ஸ் விழாவுக்கு செல்கிறார். எனவே இந்த ஆண்டு கேன்ஸ் விழா, இந்திய திரைப்பட திருவிழாவாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment