சென்னை: இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடி அசத்தினார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.
1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகிறது.
இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும், மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.
பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக முதன் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தில்லு முல்லு தில்லு முல்லு' எனத் தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் ஆடியிருக்கிறார்.
இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், "என் தந்தை இளையராஜாவும் எம்எஸ்வியும் இணைந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தற்போது ‘தில்லு முல்லு' ரீமேக்கிற்காக நான் எம்எஸ்வியுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இதைவிட வேறு பெருமை இல்லை.
பழைய ‘தில்லுமுல்லு' படத்தில் இடம்பெற்ற ‘தில்லு முல்லு தில்லு முல்லு ' என்ற பாடலுக்கு வரிகளை மாற்றாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடலுக்கு எம்எஸ்வியுடன் இணைந்து பாடியதோடு, அவருடன் ஆடினேன்" என்றார்.
இதுகுறித்து எம்எஸ் விஸ்வநாதன் கூறுகையில், 'யுவனுடன் பணியாற்றியது ஒரு புதிய அனுபவம். இப்படி ஆடிப் பாடுவது இன்னும் புதிய அனுபவம்," என்றார்.
Post a Comment