பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி

|

Playback Singer P B Srinivas Passes Away

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 83.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார்.

அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.

தமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா இரங்கல்

சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Post a Comment