ஹைதராபாத் போலீஸ் முன் ஆஜரானார் அஞ்சலி.. மும்பையில் தங்கியிருந்ததாக விளக்கம்!

|

ஹைதராபாத்: காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.

அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

missing anjali makes appearance before hyderabad police   
இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார்.

கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார்.

ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read in English: Hyd: Missing actress Anjali returns
 

Post a Comment