சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாசனை அத்தனை பேரும் மறந்து விட்டனர்.
இப்படியாப்பட்ட பவர் ஸ்டார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ 2 லட்சம் கடன் பெற்றார். இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் செக் கொடுத்தார். அந்த செக் பணம் இல்லாமல் பாங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது.
இதனால் பொன்னுச்சாமி சார்பில் அவரது மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜர் ஆகவில்லை. இதனால் 2009-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடாசலம் மீண்டும் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் 15-ந் தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நாமக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
போலீஸாரும் அவரை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்தமான் பக்கம் போய் விட்டதாக ஒரு தகவல் லீக் ஆனது. ஆனால் போலீஸார் சினிமாப் பட இயக்குநர் போல பவரிடமே பேசி அவர் எங்கே இருக்கிறார் என்பதை அவரது வாயிலிருந்தே வாங்கி விட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார்.
மறுபக்கம், சீனிவாசனின் வக்கீல் நாமக்கல்லில் உள்ள வக்கீல் கிருஷ்ணனுடன் பேசினார். பணத்தை கொடுக்க நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறினார்.
இது தொடர்பாக நாமக்கல் வக்கீல் கிருஷ்ணனுடன் பேச்சு நடத்த சென்னை வக்கீல் நாமக்கல் விரைந்தார். பேச்சு நடத்தி முடித்து பணத்தைக் கொடுத்து விட்டால் புகாரை வாபஸ் பெற பொன்னுச்சாமி தயாராக இருந்தார்.
இதையடுத்து பவர் தரப்பு, தொழிலதிபரை சந்தித்து உரிய பணத்தைக் கொடுத்து விட்டது. இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் கோர்ட்டில் ஒரு மனு செய்யபப்பட்டது. அதில், பவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது இன்று நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
கேஸ் வாபஸாகி வழக்கிலிருந்து மீள்வதால் அதை ஒரு வெற்றி விழாவாக பவர்ஸ்டாரும் அவரது 'விழுது'களும் கொண்டாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது... நடந்தாலும் நடக்கலாம், இதுதான் கலியுகமாச்சே!
Post a Comment