சென்னை: முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கமாட்டேன். இவர்கள் பெயர் வாங்க நாங்கள் அடி வாங்க வேண்டுமா... அது முடியாது, என்றார் நடிகர் சத்யராஜ்
அமைதிப்படை 2 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "எனக்கு அரசியல் தெரியாது. வேண்டவும் வேண்டாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் சொல்வேன். இந்த தமிழகத்துக்கு இப்போது தேவையானது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிதான்.
இவர் தலைமையில்தான் தமிழகம் புதிய மாற்றங்களைக் காணப் போகிறது.
எனக்கு வில்லனாக நடிப்பதுதான் பிடிக்கும். அப்படி நடித்த காலத்தில் மிகுந்த சந்தோஷமாக இருந்தேன். எந்த பொறுப்பும் கிடையாது.
ஆனால் ஹீரோவான பிறகு இருந்த சந்தோஷமெல்லாம் போயிடுச்சி. 1994-ம் ஆண்டு மணிவண்ணன் சார் என்கிட்ட அமைதிப்படை கதையைச் சொன்னார். வில்லனா இருந்து ஹீரோவாகி நமக்குன்னு ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டிருந்த நேரத்துல மீண்டும் வில்லனான்னு மணி கிட்ட கேட்டேன். அவரோ, ஹீரோவும் நீங்கதான், வில்லனும் நீங்கதான்னு சொன்னார். நான் இந்தப் படத்தோட கதை பிடிக்கலைன்னு கூறி தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்.
ஆனால் அவர் சொன்ன கதை அற்புதமாக இருந்தது. உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிச்சேன். இருபது ஆண்டுகள் கழித்து இப்போது இந்தப் படத்தோட இரண்டாம் பாகம். மிக அருமையான அரசியல் படமாக வந்திருக்கிறது அமைதிப்படை 2.
அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், இன்றைய அரசியலைப் பேசுகிறது படம்.
வில்லனா நடிக்கிறது பத்தி கவலைப்படல. ஆனால் அதுக்காக சும்மா ஹீரோகிட்ட அடிவாங்கிட்டு போற மாதிரி சப்பையான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
இவங்க ஹீரோவாகிறதுக்கு நாம அடிவாங்கணுமா? வேகமா நடக்கிறது, ஸ்லோமோஷனில் நடக்கிறது, விரலசைவுக்கு சவுண்ட் கொடுக்கிற பில்ட் அப்பெல்லாம் வேற எங்காவது வெச்சிக்கட்டும். இந்தப் படத்துலகூட, 'இவங்க ட்ரம்ஸ் வாசிக்க எங்க பம்ஸ்தான் கிடைச்சுதா'-ன்னு ஒரு வசனம் வச்சிருக்காங்க (பின்பக்கம் திருப்பிக் காட்டுகிறார்).
வில்லனா நடிக்கணும்னா, அந்தப் பாத்திரம் அதிகபட்ச வீச்சோட இருக்கணும். எனக்குத் தெரிஞ்சு, இந்த சினிமாவுல பிரமாதமான வில்லன் வேடம் அமைதிப்படை அமாவாசைதான். அதை முறியடிக்கிற மாதிரி இன்னொரு வில்லன் வேடத்தை மணிவண்ணன் தவிர யாராலும் உருவாக்க முடியாதுன்னு நான் அடிச்சி சொல்றேன்," என்றார்.
நம்ம வடிவேலு வண்டு முருகனாக சவுண்ட் விடற மாதிரி ஒரு எஃபெக்ட்!
Post a Comment