சிவாஜி நடித்த அப்பர் வேடத்தில் நடிப்பதா?- விவேக்குக்கு தொடரும் எதிர்ப்பு!

|

Sivaji Ganesan Fans Condemned Vivek

சிவாஜி கணேசன் நடித்த அப்பர் வேடத்தில் விவேக் நடிக்கக் கூடாது என்று வேலூர் மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் ஒரு படத்தில் அப்பர் வேடத்தில் சிவாஜி போல நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில் சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது வேலூர் மாவட்ட ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவாஜி மன்றத்தினர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

நடிப்பில் யாராலும் தொடமுடியாத உச்சத்தை தொட்டு ‘திருவருட்செல்வர்' படத்தில் அப்பர் பெருமானாக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியவர் நடிகர் திலகம்.

அந்த கதாபாத்திரத்தை அவர் தன் வாழ்வில் ஒரு பாக்கியமாக கருதி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நடித்தார். அந்த அப்பர் வேடத்தையும் காமெடி என்ற பெயரில் விவேக் தனது ரிலீசாகப் போகும் ஒரு படத்தில் கிண்டல் செய்திருப்பதாக தெரிகிறது.

அப்படத்தின் சுவரொட்டிகளில் சிவாஜியின் அப்பர் வேடத்தை போலவே விவேக் நடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ‘பராசக்தி', ‘முதல் மரியாதை' போன்ற படங்களில் நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களை விவேக் காப்பியடித்து கிண்டல் செய்தபோதே நாங்கள் அதை வன்மையாக கண்டித்தோம். ஆனால் விவேக் தனது போக்கை நிறுத்தவில்லை.

மேலும் மேலும் அந்த உலக நடிகரின் ரசிகர்களின் உள்ளங்களை புண்படுத்தி வருகிறார். இனியும் இதுபோன்ற மலிவான விளம்பரங்களில் விவேக் போதை கொள்ளாமல் தனது வேலைகளை இத்தோடு நிறுத்தி கொள்வது நல்லது. இல்லையேல் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்களாகிய நாங்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்று விவேக்கை எரிச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment