சென்னை: என்னைப் பற்றி கூறியுள்ள புகார்களுக்கு நடிகை அஞ்சலி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மு.களஞ்சியம்.
தனது சித்தி பாரதி தேவி மற்றும் களஞ்சியம் ஆகியோர் மீ்து சரமாரியான புகார்களைக் கூறியுள்ளார் அஞ்சலி. ஹைதராபாத்துக்கும் அவர் இடம் பெயர்ந்து போய் விட்டார்.
இந்த நிலையில் அஞ்சலியின் புகார்கள் குறித்து களஞ்சியம் கூறுகையில், அஞ்சலியை நான்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்தேன். சத்தமில்லாமல் முத்தமிடு என்ற படத்தில், நடிகை தேவயானியின் தம்பி ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்தேன். அந்த படம் வெளிவரவில்லை. முதல் பட டைரக்டர் என்ற முறையில், அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு பழக்கம் இருந்தது.
குடும்ப நண்பர் என்ற முறையில், நான் அவர்களுக்கு சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். பாரதிதேவி அஞ்சலியின் தாயார் இல்லை என்பது, எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. அவர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுவது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.
ஒரு காலத்தில், அஞ்சலியின் தாயாருக்கு நான் சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையில் அஞ்சலி என்னை இழுத்து விட்டு இருக்கிறார். இப்போது அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.
அஞ்சலி சம்பாதித்த பணத்தை எல்லாம் நான் சுருட்டி விட்டதாக கூறியிருக்கிறார். இதை அவர் நிரூபிக்க முடியுமா? நிரூபிக்காவிட்டால் நான் அவரை சட்ட ரீதியாக சந்திப்பேன்.
என்னை பற்றி தவறாக கருத்து தெரிவித்து விட்டதாக நாளையே அஞ்சலி மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அஞ்சலி பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிட வேண்டியிருக்கும் என்றார் களஞ்சியம்.
பாரதிதேவி, அஞ்சலி புகார் குறித்து விரிவாக பேச மறுக்கிறார். அஞ்சலி சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது என்று மட்டுமே அவர் சொல்கிறார்.
Post a Comment