பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

|

Violin Maestro Lalgudi Jayaraman Is No More

சென்னை: பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார்.

பிரபல வயலின் மேதையும், சிறந்த இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. அவர் பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூஷன் (2001) ஆகிய விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் என்னும் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளைத் தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இசைக்குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்குச் சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகுக்கு உணர்த்தியவர், இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர்.

தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர். கடினமான ராகங்களான "நீலாம்பரி', "தேவகாந்தாரி' ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

சங்கீத நாடக அகாதெமி, சங்கீத சூடாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் இசையமைத்த "சிருங்காரம்' என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது. லால்குடி ஜெயராமனின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

லால்குடி ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

லால்குடி ஜெயராமனுக்கு மனைவியும், மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி ஆகியோரும் உள்ளனர். அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரும் பிரபல வயலின் வித்வான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment