சென்னை: ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை, என்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி, மெரீனா படத்தில் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். பின்னர் மனம் கொத்திப் பறவை, 3 படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அவரும் விமலும் நடித்து வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவர் இன்று சென்னை ரெசிடென்சி டவரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "நான் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளேன். ஆனால் பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது கேடி பில்லா கில்லாடி ரங்காதான்.
நான் ஒரு படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக சிலர் எழுதியுள்ளனர். நான் ஒருபோதும் அப்படி கேட்கவில்லை. அப்படி கேட்கும் நிலையில் நான் இல்லை என்பதையும் அறிவேன். இனி வரும் படங்களுக்குத்தான் சம்பளத்தை உயர்த்த வேண்டும்", என்றவரிடம், 'உங்கள் அடுத்தடுத்த படங்களில் யாரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுகிறீர்களாமே?" என்று கேட்டனர் நிருபர்கள்.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "அதிலெல்லாம் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இன்னொன்று நான் சொன்னவுடனே இவரை ஹீரோயினாகப் போடலாம் எனும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை," என்றார்.
அவரிடம் கேட்கப்பட்ட இன்னும் சில கேள்விகள்...
ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கும் ஐடியா இருக்கா?
நம்மள காமெடியனாவே பார்த்துப் பழகிட்டாங்க. அதனால இப்போதைக்கு இதே ரூட்டுலதான் போயாகணும். மெல்ல மெல்ல ஆக்ஷன் ரூட்டுக்கு மாறிடலாம்.
ஒரு படத்தை இயக்கும் யோசனை உண்டா?
உண்மையில் நான் இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நடிகனாகிவிட்டேன். உள்ளுக்குள் ஒரு படத்தை இயக்கும் ஆசை இருக்கு. ஆனால் இயக்குநர் படும் பாட்டைப் பார்த்தபிறகு அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டேன்.
சந்தானமும் நீங்களும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பேசிவைத்துக் கொண்டிருக்கிறீர்களாமே?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பேன்.
உங்களுக்குப் பிடித்த காமெடியன் யார்?
கவுண்டமணி.
Post a Comment