லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் நேஷனல் அசோஷியேஷன் ஆப் பிராட்காஸ்டர்ஸ் (NAB) கண்காட்சியில் தோன்றி, சர்வதேச அளவில் பாலிவுட் சினிமாவின் தாக்கம் குறித்து இன்று பேசுகிறார் நடிகர் கமல்ஹாஸன். அவருக்கு சிறப்பு விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
எல்லைகளுக்கப்பால் பாலிவுட் (Bollywood Beyond Borders) என்ற தலைப்பில் இன்று மாலை 4.15 முதல் 5.15 வரை சிறப்பு நிகழ்வு இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இதில் நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா பற்றியும், விஸ்வரூபம் திரைப்பட உருவாக்கம் குறித்த காட்சிகளும் இடம் பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் கமலுடன் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொஸைட்டியின் இயக்குநர் ஜெஃப் க்ளைஸர், நடிகை பூஜா குமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைஸர்கள் டிம் மெக்கோவன், மதுசூதனன், இன்டெல் நிறுவனத்தின் ரவி வேல்ஹல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமாவை கவுரவிக்கும் வகையில் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
NAB கண்காட்சி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. 11-ம் தேதி முடிவடைகிறது. உலகின் 151 நாடுகளிலிருந்து 1600-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரானிக் ஷோ என்பது குறிப்பிடத்தக்கது. வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகம் சார்ந்த எலெக்ட்ரானிக் கருவிகளின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை இங்கே தெரிந்து கொள்ளமுடியும்.
Post a Comment