ஆசியா கண்டத்தில் உள்ள அழகிய வனப்பகுதிகள், மலைகள், கடற்கரைகள், வனவிலங்குகள் என அனைத்தையும் வீட்டின் வரவேற்பு அறைக்கு கொண்டு வருகிறது டிஸ்கவரி சேனல். ‘வைல்டு ஆசியா' நிகழ்ச்சியில் விலங்குகளின் வாழ்விடங்கள் அவற்றின் குணாதிசயங்களை விளக்குகிறது.
அழுது வடியும் சீரியல்களை பார்க்க விருப்பம் இல்லாதவர்கள் இசைச் சேனல்களின் பக்கம் கவனம் செலுத்துவார்கள். சிலரோ ஸ்போர்ட் சேனல்கள் பக்கம் ஒதுங்குவார்கள். விலங்குகளின் காதலர்கள் டிஸ்கவரி, அனிமல் பிளானட் என்று ரிமோட்டை திருப்புவார்கள். அவர்களுக்காகவே டிஸ்கவரி தமிழ் சேனலில் புதன் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது நிகழ்ச்சி வைல்டு ஆசியா.
இந்த தொடரில் ஐலேன்ட் மேஜிக் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், ஆசியாவின் தெற்கு எல்லையோரம் இருக்கும் சுமார் 30 ஆயிரம் தீவுகளில் காணப்படும் தாவரங்களும், விலங்குகளும் மலைக்க வைப்பவை.
இந்த அத்தியாயமானது கடந்த பனியுகம் வரை ஆசியாவின் நிலப்பரப்பில் இருந்த ஜாவா, 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவான அனக்கிரகடோவா, சுமார் 3 கோடி ஆண்டுகளாக தனித்திருக்கும் சுலவேசி என மூன்று தீவுகளுக்கு பயணிக்கிறது. இந்த பகுதியில் முக்கிய வேட்டை விலங்கான சிறுத்தைப்புலி, அழிந்து வரும் நிலையில் உள்ள யானைகளை காணலாம்.
இந்தியா தொடங்கி இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள கடற்கரைப்பகுதிகள், பாலைவனங்கள், மழைக்காடுகள், என பல்வேறு வகையான பிரதேசங்களை அங்கு வாழும் உயிரினங்களை திரைக்குள் கொண்டு வருகிறது.
உராங் உட்டான் குரங்குகள், சிறுத்தைப்புலிகள், காட்டுக்குதிரைகள், ராட்ஷச பல்லிகள் இப்படி அத்தனையையும் அவற்றின் குணாதிசயத்தோடு காட்சிப்படுத்துகிறது, வைல்ட் ஆசியா நிகழ்ச்சி.
எப்பொழுது பார்த்தாலும் அழுது வடியும் சீரியல்களை பார்த்து போர் அடித்துப் போனவர்கள் கொஞ்சம் டிஸ்கவரி சேனல் பக்கம் போயிட்டு வாங்களேன்.
Post a Comment