அஞ்சலியை சமூகவிரோதிகள் கடத்திட்டாங்க: ஹைகோர்ட்டில் சித்தி ஹேபிஸ் கார்பஸ்

|

சென்னை: மாயமான அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சித்தி பாரதி தேவியுடன் பிரச்சனை ஏற்பட்ட பிறகு நடிகை அஞ்சலி தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி காலையில் அவர் மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை. அவரை யாரோ கடத்திவிட்டதாக அவரது சித்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

anjali s aunt files habeas corpus chennai hc

இந்நிலையில் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நடிகை அஞ்சலி கடந்த 8ம் தேதி எனக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. இதை பார்த்த நான் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் சமூக விரோதிகளால் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறேன். எனவே அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கும், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே அஞ்சலி முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவரை சந்தித்து தனது பிரச்சனைகளைக் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரைக் கூறி அவரிடம் பேசினால் உங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அஞ்சலி அந்த தயாரிப்பாளரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தன்னைப் பற்றி வெளியாகும் பரபரப்பு தகவல்களுக்கும், மறைவு வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க அஞ்சலி போலீசில் சரணடைய திட்டமிட்டுள்ளாராம். அவர் ஆந்திரா அல்லது சென்னையில் போலீஸ் உயர் அதிகாரி முன்பு விரைவில் சரணடைவார் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment