39வது பிறந்த நாள்... 3900 பேருக்கு உதவி!- நடிகர் விஜய் திட்டம்

|

Vijay Fans Planning Big Celebrate His 39th Bday

சென்னை: தனது 39வது பிறந்த நாளன்று 3900 பேருக்கு உதவிகள் வழங்கப் போகிறாராம் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22-ம் தேதி வருகிறது. இதற்காக இப்போதே அவரது ரசிகர் மன்றத்தின் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் விஜய் பிறந்த நாளை சென்னையில் ஒரு மாநாடு மாதிரி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படத்தின் பாடல்களை ஜூன் 22 காலையில் வெளியிடுகின்றனர்.

அன்று மாலை ஜூன் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் மிகப் பிரம்மாண்ட மேடை அமைத்து, 3900 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் போகிறார்களாம்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். ரசிகர்களிடமிருந்தும் நிதி திரட்டும் வேலை நடப்பதாகத் தெரிகிறது.

கடைசியாக விஜய் கலந்துகொண்ட இரு இலவச திருமண உதவித் திட்ட விழாக்கள் படு சொதப்பலாக மாறின. காரணம் ரசிகர்களின் ஆர்வக் கோளாறு மற்றும் போதிய பாதுகாப்பின்மை. எனவே இந்த நிகழ்ச்சியை பக்காவாக திட்டமிட்டுள்ளார்களாம். முதல்முறையாக ரசிகர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து தொண்டர் படை போல ஒரு ஏற்பாட்டைச் செய்துள்ளார்களாம்.

தொண்டர் படையே தொந்தரவுப் படையாக மாறாமலிருக்கணுமே!!

 

Post a Comment