அம்மா ஆசியுடன் இயக்குநர் சங்கத் தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்வி உதயகுமார்!

|

Rv Udhayakumar Contesting Directors Assn President Post

சென்னை: தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார் இயக்குநர் ஆர்வி உதயகுமார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 2,400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தற்போது தலைவராக இயக்குநர் பாரதிராஜா இருந்து வருகிறார். அவருடைய தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் போட்டியிடுகிறார். ‘உரிமை கீதம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், எஜமான், சின்னக் கவுண்டர், கிழக்கு வாசல், பொன்னுமணி, சிங்காரவேலன் உள்பட தமிழ் - தெலுங்கில் மொத்தம் 24 படங்களை இயக்கியுள்ளார்.

இவர், நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இவர் தீவிர அதிமுக விசுவாசி. திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்துக்கு பரிந்துரைத்தல், கேளிக்கை வரி விலக்குக்கான பரிந்துரைக் குழு போன்றவற்றில் இடம்பெற்றுள்ளார் ஆர்வி உதயகுமார். முதல்வரின் ஆசியுடன் இந்த பதவிக்கு அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment