சினிமாவில் ரவுடி... நிஜத்தில் செயின் பறிப்பு, திருட்டுத் தொழில்.. - துணை நடிகர் கைது!

|

சென்னை: திருட்டு மற்றும் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட ஸ்டன்ட் துணை நடிகர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு குற்றங்கள், பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் உதவி ஆணையாளர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த மே மாதத்தில் ராமாபுரம் சாந்தி நகர் மெயின் ரோடு பகுதியின் சீனிவாசன் என்பவரை வழிமறித்து செயினை பறித்து கொண்டு தப்பி ஓடும் போது அந்தப் பகுதியின் பணியில் இருந்து தனிப்படை போலீசார் மடக்கி கைது செய்தனர். மேலும் விசாரனையில் 6 வழக்குகளில் வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஆழ்வார்த்திருநகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுத்து சென்றதாகவும், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும், பின்னர் திருவள்ளுவர் சாலையில் பெண்ணிடம் தாலி செயினை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் விசாரணையில் ஒப்புக் கொண்டார் சீனிவாசன்.

தனக்கு திருமணம் ஆகி 12 வயதுள்ள மகன் இருப்பதாகவும், சின்னத்திரை மற்றும் சினிமாவில் ரவுடி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறிய அவர், வருமானம் சரிவர கிடைக்காததால் சினிமா கேரக்டர் மாதிரியே நிஜத்திலும் வாழ முடிவு செய்துள்ளார். செயின் பறிப்பு, திருட்டு குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் துணை நடிகர்.

அவரிடமிருந்து 25 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

 

Post a Comment