பெப்சி போராட்டம் வாபஸ்... இன்று முதல் படப்பிடிப்பு நடக்கும்!

|

சென்னை: கடந்த இரண்டு தினங்களாக நடந்த ‘பெப்சி' தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்' வாபஸ் பெறப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொருளாளர் அங்கமுத்து சண்முகம், நிர்வாகி தனபால் ஆகிய இருவரையும் திரைப்பட கார் டிரைவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதை தொடர்ந்து, ‘பெப்சி' தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.

தமிழ் படப்பிடிப்புகள் அனைத்தும் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன. விஷால் நடித்த ‘பாண்டிய நாடு, கார்த்தி நடித்த ‘பிரியாணி' உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

fefsi withdraws strike

‘பெப்சி' தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 2- வது நாளாக தொடர்ந்தது. இதனால் நேற்றும் படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருடனும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் பி.எல்.தேனப்பன், பொருளாளர் எஸ்.தாணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

‘பெப்சி' தொழிலாளர்கள் நேற்று மாலை தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள்.

இன்று (வியாழக்கிழமை) படப்பிடிப்புகள் தொடங்கும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

பெப்சி நிர்வாகிகள் தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதாகவும், தாக்குதலில் தொடர்புள்ள மேலும் ஒருவரையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டத்தை தொடங்குவோம் என்றும் ‘பெப்சி' சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment