கருப்பாக இருப்பதால், ஒடுக்கப்பட்ட சாதி என்பதால் கலாபவன்மணி மீது வழக்கு! - அம்பலமாக்கிய அதிகாரி

|

Alleged Assault On Forest Officials

கொச்சி: வனத்துறை அதிகாரிகளைத் தாக்கிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் கருப்பாக, ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பதால் இந்த வேற்றுமை பாராட்டியுள்ளது போலீஸ் என்று, காவல்துறை உயர் அதிகாரி அம்பலமாக்கியுள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் நண்பர்களுடன், காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய நடிகர் கலாபவன்மணியின் காருக்குள் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர்.

அப்போது, கலாபவனும் அவரது நண்பர்களும் வனஅதிகாரிகளை தடுத்து தாக்கியதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்வதை தவிர்க்கும்பொருட்டு, கேரள உயர்நீதிமன்றத்தில், கலாபவன்மணி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், காரில் இருந்த நண்பர்களின் மனைவிகளை வன அலுவலர்கள் தவறாக பேசியதாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை அவதூறாக பேசியதாகவும் தனது சாதி குறித்து அதிகாரிகள் விசாரித்ததாகவும் கலாபவன்மணி கூறியுள்ளார். இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி சதீஷ் சந்திரன் ஒத்திவைத்துள்ளார்.

கலாபவனுக்கு போலீஸ் அதிகாரி ஆதரவு

இதற்கிடையில், கலாபவன் மணி தரப்பில் நியாயமிருப்பதாக போலீஸ் அதிகாரி டிபி செங்குமார் கூறியுள்ளார். இன்டெலிஜென்ஸ் பிரிவு கூடுதல் டிஜிபி இவர்.

கேரள போலீஸ் சங்க விழாவில் பேசிய அவர், "கலாபவன் மணி விஷயத்தில் போலீசார் அத்துமீறியுள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி எஸ்பியிடம் நான் பேசினேன். இதுவே மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், திலீப் போன்ற சூப்பர் ஸ்டார்களாக இருந்தால், இதுபோல அத்துமீறி கேவலமாக போலீசார் நடந்திருப்பீர்களா என்று கேட்டபோது அவரால் பதில் பேச முடியவில்லை... ஏன் ஆளுக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றமாதிரி போலீஸ் நடந்து கொள்கிறது?," என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கலாபவன் மணி கருப்பாக இருப்பதால், ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இப்படி அவமானப்படுத்தி வழக்குப் போட்டிருப்பதாக சொல்லப்படுவதை தான் ஒப்புக் கொள்வதாகவும், வெள்ளையாக இருக்கும் உயர்சாதிக்காரர்களுக்கு சல்யூட் அடிக்கும் போலீசார், கலாபவன் மணி போன்றவர்களை அவமானப்படுத்துவதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Post a Comment