மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரான் சோப்ராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரான் சோப்ரா தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். 93 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். இதனால் அவரால் கடந்த 3ம் தேதி டெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.
பிரான் குடும்பத்தார் யாரும் அவருக்கு பதிலாக விருதை வாங்க வரவில்லை. இதையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனிஷ் திவாரி இந்த விருதை பிரானுக்கு வழங்கினார்.
பிரான் ஹீரோவாக நடித்ததைவிட வில்லன் வேடங்களில் அசத்தி இருப்பார். வில்லன் கதாபாத்திரம் தவிர குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 1960களில் இருந்து 80கள் வரை ரிலீஸான கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் படங்களிலும் பிரான் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக ஹீரோ, ஹீரோயினைவிட அவர் அதிக சம்பளம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment