காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் டி.எம்.சவுந்தரராஜன்: வைரமுத்து

|

Leaders Condole Death Tm Soundararajan

சென்னை: ‘தமிழைத் தமிழாக உச்சரித்த குரல், காற்றையே கட்டி ஆண்ட மகா கலைஞன் ' என நேற்று உடல் நலக்குறைவினால் மறைந்த பிரபல பிண்ணனிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில்...

நாட்டையே ஆண்ட சிம்மக்குரல்...

50 ஆண்டுகளாய்த் தமிழ்நாட்டை ஆண்ட குரல் அடங்கிவிட்டது. காற்றில் ஒரு வெற்றிடம் விழுந்து விட்டது. மறக்க முடியுமா அந்த மணிக்குரலை?. பிஞ்சு வயது முதல் எங்கள் வாழ்வின் தாழ்வாரங்களில் தவழ்ந்த குரல் டி.எம்.எஸ். குரல்.

காதலும், கண்ணீரும்...

எங்கள் பால்ய வயதை நுரைக்க நுரைக்க நிறைத்த குரல். எங்கள் காதலோடும் கண்ணீரோடும் கலந்த குரல். இலக்கியங்களைப் பாடிக் காட்டியக் குரல்; தமிழைத் தமிழாக உச்சரித்த குரல். இப்படிப்பாட இன்னொருவர் பிறக்க முடியுமா என்று ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் ஆச்சரியத்தை அள்ளி வீசும் குரல் அவர் குரல். கருவறை தொடங்கிக் கல்லறை வரையில் வாழ்வின் சம்பவங்களோடு கூடவே வரும் குரல். அவருக்கிணையான குரல் அவருக்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை.

நான் கேட்ட முதல் பாடல்...

நாடோடி மன்னனில் அவர் பாடிய தூங்காதே தம்பி தூங்காதே பாடல் தான் 6 வயதில் நான் கேட்ட முதல் பாடல். என் வாலிபத்தோடு அவர் குரல் வலம் வந்து கொண்டே இருந்தது. எரிமலை எப்படிப் பொறுக்கும் என்று அவருக்கு நான் பாடல் எழுதுவேன் என்றோ அவரோடு சென்று பத்மஸ்ரீ பட்டம் பெறுவேன் என்றோ நினைத்தே பார்த்ததில்லை.

மயக்கும் குரலோன்...

சோர்ந்து கிடக்கும் மனசுக்குச் சுளுக்கெடுக்கும் குரல் டி.எம்.எஸ்.சின் குரல். ‘அச்சமென்பது மடமையடா‘ பாடலை கேட்கும்போது நரம்புகள் தெரிக்கும். ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?‘ கேட்கும்போது காதல் ரசம் கசியும். ‘நான் ஆணையிட்டால்‘ கேட்கும்போது சோர்ந்து கிடக்கும் மனம் துள்ளி எழும். ‘எண்ணிரண்டு பதினாறு வயது‘ கேட்கும் போது மனம் 16 வயதுக்குப் பயணப்படும்.

குரலில் ரசவாதம்...

எந்த நடிகருக்குப் பாடினாலும் அதை உள்வாங்கித் தனமயப்படுத்திக்கொண்டு தன் பாடலாகவே மாற்றிக்கொள்ளும் ரசவாதம் தெரிவித்தவர். திராவிட இயக்க அரசியலை வளர்த்ததில் அவர் குரலுக்குப் பெரும் பங்குண்டு. அவர் மரணத்திற்கு முதல் நாள் முன்னிரவு 7.30 மணிக்கு அவரைச் சென்று பார்த்தேன். காற்றையே கட்டி ஆண்ட அந்த மகா கலைஞன் சுவாசிக்கத் துன்பப் பட்ட காட்சி கண்டு கண்கலங்கி நின்றேன்.

இரங்கள்...

அவர் உடல் மறைந்தாலும் குரல் மறைவதில்லை. இன்னும் பல தலைமுறைகளைத் தாண்டி தமிழ் சொல்லிக் கொடுக்கும் சங்கீதக் குரலாக டி.எம்.எஸ்.சின் குரல் நெடுங்காலம் நிலைத்திருக்கும். வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை டி.எம்.எஸ். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், அவரது உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

 

Post a Comment