சென்னை: கேன்ஸ் பட விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்வார், அங்கு வைத்து கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவார் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அங்கு ரஜினி செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேறு ஒரு தேதியில் படத்தின் ட்ரைலரை வெளியிடவிருப்பதாக இயக்குநர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.
ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் புதிய பரீட்சார்த்த முயற்சியாகவும், இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படம் என்ற பெருமைக்குரியதாகவும் பார்க்கப்படும் கோச்சடையானுக்காக உலகம் முழுக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
திரையுலகின் முதல் நிலை கலைஞர்கள் இந்தப் படத்தில் கைகோர்த்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாண்டுகளாக உருவாகிவரும் கோச்சடையானின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன.
படத்தின் ட்ரைலரை முதல்கட்டமாக வெளியிட்டுவிட்டு, இசை வெளியீட்டை ஜப்பானில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ட்ரைலரை கேன்ஸில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியே நேரில் கலந்து கொண்டு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் தெரிவித்திருந்தார்.
கேன்ஸ் விழா நேற்று தொடங்கிய நிலையில், விழாவுக்கு அவர் இதுவரை புறப்பட்டுச் செல்லவில்லை. ட்ரைலர் வெளியீடும் அங்கு நடக்கவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து கோச்சடையான் குழுவினரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ரஜினி சார் கேன்ஸ் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் படத்தின் ட்ரைலர் வேறொரு தேதியில் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Post a Comment