இரண்டு பாத்திரங்கள் மட்டுமே இடம்பெறும் 'வித்தையடி நானுனக்கு'!

|

இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் படம் என்ற அறிவிப்போடு வருகிறது வித்தையடி நானுனக்கு.

பானுமுரளி - சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ராமநாதன் கே பகவதி.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "இது ஒரு சைக்கோ திரில்லர் படம். கதாநாயகன் கதாநாயகி என்று யாரும் இல்லை. இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. ஒரு ஆண், ஒரு பெண் இருவரைச் சுற்றியும் கதை நடக்கிறது.

a film with just two characters

பெண் கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கும் செளரா சையத் நடித்திருக்கிறார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை மிகவும் சரளமாக எழுத, வாசிக்க மற்றும் பேசவும் திறன் பெற்ற நடிகை.

ஆண் கதாபாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டியதாகிவிட்டது... சில நடிகர்களை அணுகினோம்... அவர்களது தேதி ஒத்து வரவில்லை... வேறு வழியில்லாமல் நானே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து விட்டேன்...

நாயகன் - நாயகி இல்லை என்பதால் டூயட்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் இருக்கின்றன... எங்களது கதைக்கும் கிளாசிக்கான ரொமான்ஸ் சூழ் நிலைக்கும் ஏற்ற பாடலைத் தேடிய போது மகாகவி பாரதியின் 'பாயும் ஒளி நீ எனக்கு...' என்கிற பாடல் எங்களுக்காகப் பாடப்பட்டது போலவே இருந்தது. இது தவிர இரண்டு சிறிய பாடல்கள் இருக்கின்றன. எல்லாமே மாண்டேஜில் தான் படமாக்கியிருக்கிறோம்.

படத்தின் கதை என்ன..?

வீட்டை விட்டு ஓடி வரும் பெண்ணின் கார் பழுதாகி விடுவதால் வழியில் ஒரு ஆண் அவளுக்கு லிஃப்ட் கொடுக்கிறன். கார் நேராக கொடைக்கானலில் ஒரு பங்களாவுக்குள் செல்கிறது. அங்கு நடக்கும் திகிலான சம்பவங்கள்தான் மீதிப் படம்.

முழுப் படத்தையும் முடித்து ரஃப் கட் பண்ணிய பிறகு படம் 2.45 மணி நேரம் ஓடியது. படம் முழுவதும் இரண்டு பேர் பேசும் வசனங்களையும் உணர்ச்சிகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் குறைத்து 1.40 மணி நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு விறு விறுப்பான சைக்கோ திரில்லராக கொண்டு வர இருக்கிறோம். விவேக் நாராயணின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ரெண்டு நடிகர்கள் தாம் என்றாலும். ஒளிப்பதிவாளர், ஒப்பனைக் கலைஞர், உடை என்று ஆரம்பித்து உதவி இயக்குனர் வரை கிட்டத்தட்ட 30 பேர் 25 நாட்கள் இரவு பகலாக உழைத்துப் படப்பிடிப்பு நடத்தி வந்தோம்," என்றார்.

மீடியா மர்ச்சென்ட்ஸ், ஐஎஸ்ஆர் வென்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.

 

Post a Comment