கமல் ஹாஸனுடன் யுவன் சங்கர் ராஜா கை கோர்க்கக் கூடும் என்று சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா...
நாம் சொன்னது நடந்திருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் கமல் நடித்து இயக்கும் புதிய படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கமல்ஹாஸனின் ஆஸ்தான இசையமைப்பாளர் எனும் அளவுக்கு தொடர்ந்து இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் இந்தியனுக்குப் பிறகு அந்த நிலை மாறியது. ஏஆர் ரஹ்மான், சங்கர் எசான் லாய், ஹிமேஷ் ரேஷம்மியா, தேவா என பலரும் இசையமைத்தனர்.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா கூட காதலா காதலா படத்துக்கு இசையமைத்தார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் கோடம்பாக்கத்தில் உச்சம் தொட்டார் யுவன் சங்கர் ராஜா. இன்றைக்கு வாங்கும் சம்பளம், இசையமைக்கும் படங்கள் என எந்த அடிப்படையில் பார்த்தாலும் யுவன் சங்கர் ராஜா முதலிடத்தில் உள்ளார்.
ஆனாலும் அவர் இதுவரை ரஜினி, கமல் படங்களுக்கு மட்டும் இசையமைக்கும் வாய்ப்பைப் பெறவில்லை. அந்தக் குறையில் பாதி இப்போது தீர்ந்திருக்கிறது. லிங்குசாமியைப் பொறுத்தவரை, அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்தான். கமலை வைத்து அவர் தயாரிக்கும் படத்துக்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்பதில் லிங்குசாமி தீவிரமாக இருந்தாராம். இதைக் கேள்விப்பட்ட கமலும், என் பட்ததுக்கு யுவன் இசையமைக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். அது நடந்திருப்பதில் எனக்குத்தான் மிக்க மகிழ்ச்சி, என்றாராம்.
கமல் மாதிரி மிமிக்ரி செய்வதில் யுவன் கில்லாடி. கமல் குரலில் அப்படியே அச்சு அசலாக மேடைகளில் பாடியிருக்கிறார் யுவன். அந்த அளவு கமலின் ரசிகர் அவர். இப்போது கமல் படத்துக்கே இசையமைப்பதை மிக சந்தோஷமாக சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
Post a Comment