தயாரிப்பாளர் ஆனது அலாரம் கடிகாரத்தை விழுங்கிய மாதிரி இருக்கிறது!- விஷால்

|

Actor Vishal S Experience As Producer

சென்னை: சொந்தமாக படம் தயாரிக்க முடிவெடுத்ததிலிருந்து அலாரம் கடிகாரத்தை விழுங்கியது மாதிரியே இருக்கிறது, என்கிறார் நடிகர் விஷால்.

' விஷால் பிலிம் பேக்டரி' என்ற பெயரில் சொந்த பட நிறுவனத்தை தொடங்கியுள்ள விஷால், தன் முதல் படத்துக்கு ‘பாண்டிய நாடு' என்று தலைப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தை பற்றி நடிகர் விஷால், சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில், "என் சினிமா வாழ்க்கையை முதலில் உதவி இயக்குநராகத் தொடங்கினேன்.

‘செல்லமே' படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். மூன்றாவதாக இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறேன். எங்க அப்பா தயாரிப்பாளர். அண்ணனும் தயாரிப்பாளர். மூன்றாவதாக நானும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். அவர்களிடம் கற்றுக் கொண்டதிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன்.

இந்த பேட்டிக்கு வருவதற்கு முன்பு தயாரிப்பாளர் போல் உடை அணியலாமா, கதாநாயகன் போல் அணியலாமா? என்று யோசித்தேன். இந்த நேரத்தில் என்னை செதுக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஆனதை, ஒரு ‘அலாரம் கடிகாரத்தை' விழுங்கியது போல் உணர்கிறேன். காலையில் வழக்கமாக விழிக்கும் நேரத்தை விட, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு விழிப்பு வந்து விடுகிறது,'' என்றார்.

அவரிடம் திருமணம் குறித்து சில நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "திருமணம் நடக்கும்போது நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு என் கவனம், ‘பாண்டிய நாடு' படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தை நவம்பர் 3-ந்தேதி, தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வரவேண்டும்," என்றார்.

 

Post a Comment