சென்னை: நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் வந்த செய்தி வெறும் சினிமா விளம்பரம்தான் என்றும், நயன்தாராவை தான் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
நயன்தாராவும் ஆர்யாவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நேற்று முன்தினம் பரபரப்பாக அழைப்பிதழ் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அடுத்த இரு தினங்களில் இது வெறும் சினிமா விளம்பர பரபரப்புதான் என்பது தெரிந்துவிட்டது. நயன்தாரா - ஆர்யா நடித்து வரும் ராஜா ராணி படத்தின் முதல் பார்வைக்காக கொடுக்கப்பட்ட விளம்பரம் அது.
இதுகுறித்து முதல்முறையாக இப்போதுதான் வாய் திறந்துள்ளார் நடிகர் ஆர்யா.
அவர் கூறுகையில், "நானும், நயன்தாராவும் நல்ல நண்பர்கள். நான், நயன்தாராவை காதலிப்பதாக வந்த செய்திகள் பொய்யானவை.
எங்களுக்கு இடையே, காதல் எதுவும் கிடையாது. நயன்தாராவும் நானும் ராஜா ராணி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறோம். அந்த படத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி உள்ளது.
அதை சமீபத்தில் படமாக்கினர். அதைத்தான் பட விளம்பரமாக வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நாங்கள் இருவரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர்.
தற்போது எனக்கு, ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. இதை நடித்து கொடுத்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும்," என்றார்.
Post a Comment