கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வெற்றிப் படமான மன்மத லீலையை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி.
இன்றைய சாதனை நடிகர் - நடிகைகள் பலருக்கு வாசலாக அமைந்தது மன்மதலீலை. ஜெயபிரதா, ஒய் விஜயா, ராதா ரவி என பலரும் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.
இளம் பெண்களை ஏமாற்றி கற்புடன் விளையாடும் ப்ளேபாய் பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். ஹலோ மைடியர் ராங் நம்பர், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், மன்மதலீலை மயக்குது ஆளை உள்ளிட்ட பல பாடல்கள் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிகர்களை கிறங்கடித்தன.
பாலச்சந்தரின் தில்லுமுல்லு படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட பத்ரி, இப்போது மன்மத லீலையையும் இன்றை ட்ரெண்டுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப் போகிறாராம்.
இதுகுறித்து பத்ரி கூறுகையில், "ரஜினியின் தில்லுமுல்லு படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் காட்சிகள், வசனங்களை மாற்றி எடுத்து இருந்தேன். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்து கமலின் மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கப்படும்," என்றார்.
Post a Comment