ஜெனீவா: ஈழப் பிரச்சினையில் மாணவர்கள் முன்னெடுத்த வரலாறு காணாத போராட்டத்தை அறப்போர் என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தை வரும் சனிக்கிழமை ஜூன் 29-ம் தேதி சுவிட்சர்லாந்தில் வெளியிடுகின்றனர்.
கடந்த மார்ச் மாதம், ஐ.நா. மன்ற மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க அரசுத் தாக்கல் செய்த கண்துடைப்பு தீர்மானத்தை எதிர்த்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை நடத்தினர். மாணவர்கள் முன்னெடுத்த விதவிதமான போராட்ட வடிவங்கள் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது.
போராட்டத்தின் நெருக்கடி காரணமாக, இந்திய மத்திய அரசின் கூட்டணியிலிருந்தே தி.மு.க. வெளியேறியது; ஐ.நா.அவையில் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஒப்புதலோடுதான் கொண்டு வரப்பட்டது என்று அமெரிக்காவை ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கச் செய்தது; தமிழக சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறச் செய்தது என மாணவர் போராட்டம் சாதித்தவை ஏராளம்.
இந்த மாணவர் போராட்டத்தை கருவாகக் கொண்டு, 'அறப்போர்' என்கிற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. மூவர் மரண தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் வாழ்வைப் பதிவு செய்த 'இப்படிக்கு தோழர் செங்கொடி' ஆவணப்படத்தை இயக்கிய வெற்றிவேல் சந்திரசேகர், இப்படத்தை இயக்கியிருக்கிறார். கபிலன் சிவபாதம் தயாரித்துள்ளார்.
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி நடைபெற்ற மாணவர் போராட்டத்தை, தமிழர் அல்லாத பிற மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் இப்படம் பல்வேறு மொழிகளில் குறிப்பெழுத்துகளுடன் (Sub title) வெளியிடப்படவுள்ளது.
இந்த ஆவணப்படம் வருகின்ற ஜூலை மாதம் சென்னையில் வெளியாகவுள்ள நிலையில், முதல் கட்டமாக வருகின்ற ஜூன் 29ம் நாள் சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில், சுவிட்சர்லாந்தில் தமிழ் இளையோர் அமைப்பு சார்பில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்ட ஈகி சிவக்குமார் நினைவேந்தல் மற்றும் மாணவர் எழுச்சி நாள் நிகழ்வில் வெளியிடப்பட்டு திரையிடப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் Sala Aragonite, Via Al Boschetti 10, 6928 Manno என்ற இடத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், சுவிட்சர்லாந்து வாழ் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்கவுள்ளனர்.
Post a Comment